2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவுடன் அ.ப.வி.சுட்டி 6000 புள்ளிகளை எட்டியது

A.P.Mathan   / 2013 மே 05 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


-ச.சேகர்

தொடர்ச்சியாக 5 நாட்கள் கொழும்பு பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு பங்கு கொள்வனவி்ல் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்து, 16 மாதங்களுக்கு பின்னர் முதல் தடவையாக அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6000 புள்ளிகளை கடந்து நிறைவடைந்திருந்தது. கொமர்ஷல் வங்கி, கொலம்போ லாண்ட், தேசிய அபிவிருத்தி வங்கி, டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் கடந்த வாரம் பெருமளவு கைமாறப்பட்டிருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,013.18 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3405.99 ஆகவும் அமைந்திருந்தன.

ஏப்ரல் 29ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,237,887,538 அமைந்திருந்தது. கடந்தவாரம் மொத்தமாக 40,318 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 38,921 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,397 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் அபான்ஸ் பினான்சியல், எஸ் எம் பி லீசிங் (சாதாரண), லங்கா ஐஓசி, லங்கா செரமிக் மற்றும் என்வி றிசோர்சஸ் (வாக்குரிமை) போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

டச்வுட், ஜி எஸ் ஃபினான்ஸ், நேஷன் லங்கா (உரிமை பங்குகள்), ஹோட்டல் சீகிரிய மற்றும் செரண்டிப் ஹோட்டல் (சாதாரண) போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 48,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,000 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. அடுத்த வாரம் அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு பெருமளவானோர் தங்க நகைகள் கொள்வனவில் ஆர்வம் செலுத்துகின்றமையால் தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு காணப்படுவதாக குறித்த தங்க நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 127.78 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 198.88 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .