2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மூன்று துறைகளில் 200 மில்லியன் ரூபா முதலீடு: நேபாள செல்வந்தர் பினோத் கே.சௌத்திரி

A.P.Mathan   / 2013 மே 27 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
இலங்கையில் சுற்றுலாத்துறை, சீமெந்து மற்றும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் உள்ளடங்கிய மூன்று துறைகளில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக நேபாள நாட்டின் செல்வந்தரும், முன்னணி வர்த்தக பிரமுகருமான பினோத் சௌத்திரி தெரிவித்தார்.
 
தற்போது இலங்கையில் காணப்படும் பொருளாதார சூழ்நிலை மற்றும் சட்ட விதிமுறைகள் போன்றன வெளிநாட்டவர்களுக்கு தமது முதலீடுகளை மேற்கொள்ள கவர்ச்சிகரமானதாக அமைந்துள்ளதாகவும், குறித்த முதலீட்டு திட்டங்களுக்கான அனுமதிகளை பரிசீலனை செய்வதில் இலங்கை அரசாங்கம் கூடிய அக்கறையும், துரிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் நிலவும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சர்வதேச நாடுகளுக்கு பிரசாரப்படுத்தும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். தெற்காசிய நாடுகளில் அடுத்த சிங்கப்பூராக திகழக்கூடிய வாய்ப்பு இலங்கைக்கு காணப்படுகிறது என்றார்
 
யாழ்ப்பாணத்தில் சீமெந்து உற்பத்திகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை தாம் மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக ஆரம்ப கட்ட அனுமதிகளை தாம் பெற்றுள்ளதாகவும், சீமெந்து உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான இட வசதிகள் குறித்து தாம் தற்போது ஆராய்வதுடன், சுண்ணாம்புக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கான அனுமதியையும் சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டத்துக்கான மொத்த முதலீடு சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வரை அமைந்திருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் தற்போது பெருமளவு முதலீட்டு திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் தேவை காணப்படுவதாகவும், அத்துடன் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும், ஏற்றுமதி தராதரங்களுக்கு அமைய இந்த சீமெந்து உற்பத்தி தொழிற்சாலை அமையவுள்ளதுடன், வருடமொன்றுக்கு சுமார் ஆறு இலட்சம் தொன் சீமெந்து உற்பத்தி செய்யக்கூடிய கொள்ளளவு இந்த தொழிற்சாலையில் ஏற்படுத்தப்படவுள்ளதுடன், அரச அனுமதி கிடைத்தவுடன், 30 மாத காலப்பகுதியினுள் இந்த தொழிற்சாலை இயங்க ஆரம்பிக்கும் என குறிப்பிட்டார்.
 
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, கலந்து கொண்டிருந்த சௌத்திரி குழுமத்தின் தலைமை அதிகாரியான பினோத் கே. சௌத்திரி, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளிக்கையில், 
 
இலங்கையில் எனது முதலீட்டு நடவடிக்கைகள் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது. முதன் முதலாக கொழும்பில் அமைந்துள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் எனது முதலீடுகளை நான் மேற்கொண்டிருந்தேன். அக்கால கட்டத்தில் நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலை குறித்து நான் பெரிதும் அச்சமடையவில்லை. இலங்கையை அதிகளவு நேசிக்கிறேன். தற்போது நிலைமை சிறப்பாக முன்னேறியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை உலகளாவிய ரீதியில் தற்போது மிகவும் பிரபல்யமடைந்து வருகிறது. நாம் தாஜ் சமுத்திரா ஹோட்டல் மற்றும் ஜெட்விங் ஹோட்டல்களில் நாம் உரிமையாண்மை பங்குடமையை கொண்டுள்ள நிலையில் தற்போது, சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்கு அனுபவ ரீதியிலான புதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் சுற்றுலா தளங்களாக திகழும் வெவ்வேறு பிரதேசங்களை தெரிவுசெய்து அவற்றில் எமது பிரசன்னத்தை ஏற்படுத்தி புதிய அனுபவங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். 
 
இதுபோன்ற திட்டங்களை நாம் ஏற்கனவே இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் வெற்றிகரமான முன்னெடுத்து வருகிறோம். ஹட்டன் பகுதியில் நாம் மூன்று பங்களாக்களை இதற்காக புனர்நிர்மாணம் செய்ய நாம் தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரியம் கலந்த ஒரு புதுவிதமான அனுபவத்தை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். 
 
அதுபோன்று கண்டியில் இதுவரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹோட்டல்களில் அதியுயர் தரம் வாய்ந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்கவும் தீர்மானித்துள்ளோம். இதற்கான இடத்தையும் நாம் தெரிவு செய்துள்ளோம். 85 அறைகளை கொண்டமையவுள்ள இந்த ஹோட்டல் நிர்மாணம் குறித்த திட்ட வரைபுகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்துக்காக நாம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய தீர்மானித்துள்ளோம் என்றார்.
 
வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் சந்தை வாய்ப்புகள் குறித்து நாம் தற்போது ஆராய்ந்து வருகிறோம். அதுபோன்று இலங்கையில் நிதிச் சேவைகளை வழங்குவது குறித்தும் நாம் ஆராய்ந்து வருகிறோம். சர்வதேச ரீதியில் எமது பிரசன்னம் சுமார் 19 நாடுகளில் 79 வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த கம்பனிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கும் நாம் அதிகளவு முக்கியத்துவம் வழங்கி வருகிறோம் என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .