.jpg)
- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்
(ச.சேகர்)
தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 18 மாதங்களில் கொழும்பு பங்குச்சந்தை பதிவு செய்தி சிறந்த பெறுபேறுகளை கடந்த வாரம் பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மீது அதிகளவு நாட்டம் காணப்பட்டிருந்ததுடன், சந்தையின் மொத்த பெறுமதியில் 10 வீதத்தை ஜோன் கீல்ஸ் தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாணயக் கொள்கையின் பிரகாரம் வட்டி வீதங்களில் குறைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தமையும் பங்குச்சந்தை நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஒரு காரணியாக அமைந்திருந்ததாக பங்கு முகவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். அத்துடன், பெரும்பாலான நிறுவனங்கள் தமது காலாண்டு பெறுபேறுகளையும், வருட இறுதி நிதி பெறுபேறுகளையும் வெளியிட்டிருந்தமையும் பங்குச்சந்தை நடவடிக்கைகள் உயர்வடைய காரணமாக அமைந்திருந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,380.70 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3589.26 ஆகவும் அமைந்திருந்தன.
மே 13ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 6,149,882,052 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 48,729 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 46,514 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 2,215 ஆகவும் பதிவாகியிருந்தன.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் கொலோனியல் மோட்டர், கொத்மலே ஹோல்டிங்ஸ், சிட்ரஸ் ஹிக்கடுவ, மெட்.ரெஸ்.ஹொல் மற்றும் கார்கோ போட் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
செரண்டிப் லாண்ட், ஹியுஜே, நேஷன் லங்கா (உரிமை பங்குகள்), கொன்வீனியன்ஸ் புட்ஸ் மற்றும் சிலோ ஃபினான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
.jpg)
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 47,300 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 43,700 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 127.49 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 194.78 ஆக காணப்பட்டிருந்தது.