2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தாய்ப்பாலூட்டலை ஊக்குவிப்பதன் மூலம் பாதுகாப்பான குழந்தைப் பருவத்திற்கு அடித்தளம்

A.P.Mathan   / 2013 மே 20 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதிதாக குழந்தை பிறந்தது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலூட்டுவதன் மூலம் குழந்தை மற்றும் தாய் பல விதமான அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும். குழந்தையை பிரசவித்த பின்னர் தாய்க்கு முதன்முதலாக சுரக்கும் அடர்த்தியான மஞ்சள் நிற தாய்ப்பாலானது கொலோஸ்ட்ரம் எனப்படுகிறது. மிகச் சிறியளவு சுரக்கும் இப்பாலில் புதிதாக பிறக்கும் குழந்தைக்கு எண்ணற்ற அனுகூலங்கள் அடங்கியுள்ளன. இம் மஞ்சள் நிறப் பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதுடன், வெள்ளை நிற அணுக்கள், நோயெதிர்ப்பு புரதம், காபோஹைட்ரேட், கொழுப்பு, Docosahexaenoic acid (DHA), arachidonic acid (AA), புரதம் போன்ற உடற்காப்பு மூலங்கள் சரியான விகிதத்தில் காணப்படுகின்றன. இப் பாலானது குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாகும். 'இவ்வுலகில் தாய்ப்பாலுக்கு இணையாக எதுவுமில்லை' என இலங்கை குழந்தைநல மருத்துவ கல்லூரியின் முன்னாள் தலைவர் பேராசிரியர்.அஸ்வினி டி பெர்னான்டோ தெரிவித்தார்.
 
தாய்ப்பால் ஊட்டுவதனால் ஏற்படும் அனுகூலங்கள்:
தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் குழந்தை, தாய் ஆகிய இருவருக்கும் பலவித நன்மைகள் கிடைக்கின்றன. தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் கருப்பை புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்றன தாய்க்கு வராமல் பாதுகாக்கப்படுவதுடன், பிரசவத்தின் பின் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்கு திரும்பவும் தாய்ப்பால் உதவுகிறது. மேலும் தாய் பாலூட்டுவதன் ஊடாக தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப்பிணைப்பு அதிகமாகிறது. மேலும் தாய்ப்;பால் ஊட்டுவதனால் குழந்தையை குடல் நோய்கள், ஒவ்வாமை, நீரிழிவு, உடற்பருமன், சிறுவயது புற்றுநோய், சுவாசக்குழாய் நோய், சிறுநீரக குழாய் தொற்றுக்கள் மற்றும் SIDS (Sudden infant death syndrome) போன்ற நோய்த் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
 
சவால்கள்:
இத்தகைய நன்மைகளை கொண்ட தாய்ப்பால் குறித்து தாய்மார்கள் இயல்பாகவே அறிந்திருத்தல் அவசியம். இருப்பினும் பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இது தொடர்பில் 35 வருட அனுபவத்தை கொண்ட டாக்டர்.கல்யாணி குருகே கருத்து தெரிவிக்கையில், 'சில தாய்மார்கள் பாலூட்டுதலை மிகச் சிரமமான காரியமாக உணர்கின்றனர். மகப்பேற்றுக்கு பின்னர் சில தாய்மார்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணமாகவும் தாய்ப்பால் ஊட்டுவது குறித்து அக்கறை காட்ட தவறுகின்றனர். இதன் மூலம் தாயின் தன்னம்பிக்கை மற்றும் குழந்தை தொடர்பான அக்கறை குறைவதுடன், குழந்தைக்கு போதியளவான தாய்ப்பாலும் கிடைக்காமல் போகின்றது. 
 
இத்தகைய நிலைமைகளின் போது மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் உறவினர்களின் வழிகாட்டல் மற்றும் அறிவுரைகள் தாய்க்கு அவசியமானதாகும். இருப்பினும் துரதிஷ்டவசமாக, சில குடும்பங்கள் மற்றும் வைத்தியர்கள் மூலம் புட்டிப்பால் வழங்க தாய்மார்கள் வழி நடத்தப்படுகின்றனர். இன்று கூட்டுக் குடும்பங்கள் சிறிய குடும்பங்களாக மாற்றமடைந்துள்ளதுடன், தாயினது பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலைகள் காரணமாகவும் தாயானவள் தாய்ப்பாலுக்கு பதிலாக புட்டிப்பாலினை கொடுக்க முனைகிறாள். தாய்ப்பாலூட்டல் ஆதரவு மையங்களின் முறையான வழிகாட்டல்களின் ஊடாக இத்தகைய நிலைமைகளை தவிர்த்துக் கொள்ள முடியும்' என டாக்டர்.கல்யாணி குருகே தெரிவித்தார்.
 
வெற்றிகொண்ட சவால்கள்:
தாய்ப்பாலூட்டல் குறித்து தாய்மார்களை ஊக்குவித்தல் வேண்டும். ஏற்கனவே சில மருத்துவமனைகளில் தாய்ப்பாலூட்டல் ஆதரவு மையங்கள் (LMC) காணப்படுவதுடன், சிறந்த சேவையினையும் வழங்கிவருகிறது. இலங்கை குழந்தைகள் மருத்துவ நிலையத்தின் பங்கேற்றலுடன், குடும்பநல மருத்துவ அமைப்புடன் இணைந்து மருத்துவமனைகளில் தாய்ப்பாலூட்டல் ஆதரவு மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டன. உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் குழந்தைகள் போசணை குறைபாட்டினால் அவதியுறுகின்றனர் என கண்டறியப்பட்டதுடன், அத்தகைய நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டு இத் தாய்ப்பாலூட்டல் ஆதரவு மையங்களை ஆரம்பித்துள்ளோம். இத் திட்டத்திற்கு இலங்கை குழந்தை மருத்துவ நிலையமானது 2011/2012 ற்கான தொனிப்பொருளாக 'பாதுகாப்பான குழந்தைப் பருவத்திற்கான பாதையை ஏற்படுத்தல்' என பெயரிட்டுள்ளது என்று பேராசிரியர்.அஸ்வினி பெர்னான்டோ தெரிவித்தார்.
 
நடைமுறை அணுகுமுறைகள்:
யுனிலீவர் பெயார்ஸ் வர்த்தகநாமத்தின் மூலம் ஹோமாகம வைத்தியசாலை மற்றும் கரவனெல வைத்தியசாலையில் தாய்ப்பாலூட்டல் ஆதரவு மையங்கள் அமைக்க ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 'இத்; தாய்ப்பாலூட்டல் ஆதரவு மையங்கள்; தினசரி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்குவதுடன், தாய்மார்கள் பாலூட்டுதல் தொடர்பான அறிவுரைகள், வழிகாட்டல்கள், உளவியல் ஆதரவு, நடைமுறை அறிவுரைகள் மற்றும் பாலூட்டுதல் தொடர்பான பிரச்சனைகள் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். வழிகாட்டல்கள் அவசியமான அனைத்து தாய்மார்களுக்கும் எமது சேவை வழங்கப்படும். தனியார் வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த தாயாக இருந்தாலும் எமது சேவை மற்றும் வழிகாட்டல்களை பெற முடியும். பெயார்ஸ் வர்த்தகநாமத்தின் கீழ் ஆதரவளிக்கப்படும் இந் நிலையங்களில் பணிபுரிகின்ற குழந்தை நல மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் மூலம் தாய்மார்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன், ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தை மீதும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. இந் நிலையங்களில்; தாய்மார்கள் அதிக நேரத்தை கழிக்க உதவும் வகையில் கவர்ச்சிகரமாக உட்புற தோற்றத்தை அலங்கரித்துள்ளோம். இதன் மூலம் தாய்மார்கள் சிறந்த வழிகாட்டல்கள் மற்றும் அறிவுரைகளை பெற்றுக் கொள்ள முடியும்' என ஹோமாகம மருத்துவமனையின் குழந்தைநல ஆலோசகர் டாக்டர்.ரசிகா குணபால தெரிவித்தார். இந் நிலையங்கள் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை தினங்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்குவதுடன், நிலையத்திற்கு சமூகமளிக்க முடியாதவர்கள் அவசர அழைப்பின் ஊடாக வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ள முடியும். இத் திட்டத்தின் மூலம் தாய்மார்கள் உச்ச பயனடையும் பொருட்டு, மகப்பேற்று பிரிவுகளுக்கு அருகாமையிலேயே இந் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்;, உட்புற தோற்றமானது தாய் பாலூட்டுதல் தொடர்பான சுவரொட்டிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
 
காலத்தின் கட்டாயத் தேவையாகவுள்ள இத் தாய்ப்பாலூட்டல் ஆதரவு மையங்கள்; குறித்து கருத்து தெரிவித்த டாக்டர்.கல்யாணி குருகே, 'கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் அண்மைக்காலமாக நாட்டில் தாய்ப்பாலூட்டும் வீதம் அதிகரித்துள்ளது. முன்னரை விட தாய்மார்களின் கல்வியறிவு வீதம் அதிகமாக காணப்படுவதுடன், எமது அறிவுரைகளையும் பின்பற்றுகின்றனர். இருப்பினும், முறையான தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்பின் மூலம் தாய்மார்கள் சவால்களை எதிர்கொள்ள உதவியாக அமையும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .