
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பயனாக இலங்கையில் வாழும் கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன் என ஜனாதிபதி மஹிந்த சிந்தனையில் வழங்கிய வாக்குறுதியை இன்று மெய்ப்பித்துக் காட்டியுள்ளார் என ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர் அத்துல புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2013ஆம் ஆண்டுக்கான சர்வதேச வலையமைக்கப்பட்ட சுட்டிக்கான வரிசைப்படுத்தல் 144 நாடுகளை மையமாகக் கொண்டு இடம்பெற்றது. இதில் இலங்கை கடந்த ஆண்டைவிட முன்னேறி 69ஆம் இடத்தை எய்தியமை தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தின் சிறந்த சான்றாகுமென இக்டாவின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ரெஷான் தேவபுர தெரிவித்தார்.
வலையமாக்கப்பட்ட தயார்நிலை சுட்டு அல்லது 'நெற்வர்கட் ரெடிநஸ் இன்டெக்ஸ்' ஒருநாடு பொருளாதாரம் போட்டித் தன்மையையும் பொதுமக்களின் நலனையும் ஊக்குவிப்பதற்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு எந்த அளவில் தயார் நிலையிலுள்ளது என்பதை அளவிடுகிறது. ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் இந்த சர்வதேச அறிக்கையில் இலங்கை தொடர்ச்சியாக முன்னேறிவருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
உலக தகவல் தொழில்நுட்ப அறிக்கை 12ஆம் முறையாக வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கை இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறதென்பதை உறுதிப்படுத்துகிறது. உலக பொருளாதார மன்றமும் 'இன்சீட்' என்னும் குறுகிய பெயரைக் கொண்ட ஐரோப்பிய நிர்வாக விவகார நிறுவனமும் சேர்ந்து வெளியிடும் இவ்வலையமாக்கப்பட்ட தயார்நிலை சுட்டியினை உள்ளடக்கிய இவ் அறிக்கை இலங்கைக்கு இன்னும் முன்னேற ஒரு பெரும் சக்தியை வழங்குகிறது' என தேவபுர கூறுகிறார்.
இரண்டாயிரத்து பதின்மூன்றாம் ஆண்டில் கடந்த ஆண்டிலும் பார்க்க இலங்கையின் வலையமாக்கப்பட்ட தயார்நிலை சுட்டு உட்பட்ட உலகளாவிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலை இரண்டு இடங்களால் உயர்ந்துள்ளது. இரண்டாயிரத்துப் பன்னிரண்டில் 142 நாடுகளில் 71ஆம் இடத்தை வகித்த இலங்கையின் வலையமாக்கப்பட்ட தயார்நிலை சுட்டு 2013இல் இரண்டு இடங்களைத் தாண்டி 69ஆம் இடத்துக்கு உயர்ந்துள்ளது.
வலையமாக்கப்பட்ட தயார் நிலைசுட்டு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் குறிப்பிடப்பட்ட நாடுகளில் அல்லது பொருளாதாரங்களில் எவ்வாறான ஒப்பீட்டு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை காட்டுகிறது. இந்த ஒப்பீட்டு பார்வையில் வலையமாக்கப்பட்ட தயார்நிலை சுட்டின் படி இலங்கை பிராந்திய ஒத்துழைப்புக்கான தென் ஆசிய சங்கநாடுகளிடையே இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. வலையமாக்கப்பட்ட தயார்நிலை சுட்டியின்படி 68ஆம் இடத்தை வகிக்கும் இந்தியா, இலங்கையிலும் பார்க்க ஓர் இடத்தால் முன்னணியில் இருக்கின்றபோதிலும் இலங்கையினதும் இந்தியாவினதும் தனிமதிப்பு அல்லது மதிப்பெண் ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.
பிராந்திய ஒத்துழைப்புக்கான தென் ஆசிய சங்க நாடுகளுள் பாகிஸ்தான், வங்காளம் மற்றும் நேபால் முறையே 105ஆம், 114ஆம் மற்றும் 126ஆம் இடங்களை வகிக்கின்றன. இவ் வலையமாக்கப்பட்ட தயார்நிலை சுட்டின் படி இலங்கை முறைப்படி 75ஆம், 70ஆம், 76ஆம், 84ஆம் 74ஆம் மற்றும் 86ஆம் இடங்களை வகிக்கும் ருமேனியா (75), தென்ஆபிரிக்கா (70), இந்தோநேஷியா (76), வியட்நாம் (84), தாய்லாந்து (74) மற்றும் பிலிப்பைன்ஸ் (86) ஆகிய நாடுகளின் முன்னிலையில் உள்ளது.
இரண்டாயிரத்து பதின்மூன்றாம் ஆண்டின் வலையமாக்கப்பட்ட தயார்நிலை சுட்டின்படி முதல் 10 இடங்களை முறையே ஃபினலாந்து, சிங்கப்பூர், சுவீடன், நெதர்லாந்து, நோர்வே, சுவிற்சர்லாந்து, ஐக்கியராச்சியம், டென்மார்க், ஐக்கியஅமெரிக்கா மற்றும் தாய்வான், சீனா ஆகின்றன.
