
சமூகமொன்றின் சுகாதார நலனில் பிரதிபலிப்பை ஏற்படுத்தக்கூடிய சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஹேமாஸ் தலவத்துகொட வைத்தியசாலை ஆரம்பித்துள்ளது. சுகாதார விழிப்புணர்வு தொடர்பாக இலவசமாக அமைந்த விழிப்புணர்வு திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் அண்மையில் தலவத்துகொட ஹேமாஸ் வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்தது. மக்களின் பாவனைக்காக இந்த வைத்தியசாலை எதிர்வரும் ஜூன் மாதம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் தலைப்பு பொதுவான இருதய குறைபாடுகள் மற்றும் அவற்றை தவிர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கங்களை பொது மக்களுக்கு வழங்குவதாக அமைந்திருந்தது. இத் திட்டத்தை இலங்கை தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை நிபுணரான வைத்தியர் சம்பிக பொன்னம்பெரும முன்னெடுத்திருந்தார். இந்த திட்டத்தில், இந்த பிரதேசத்தை சேர்ந்த பெருமளவான பொதுமக்கள் பங்குபற்றி அனுகூலங்களை பெற்றிருந்தனர். இவ்வாறு பங்குபற்றியவர்களுக்கு இலவசமாக குருதியிலுள்ள சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த செயலமர்வின் போது, பொது விடயங்களான அறிகுறிகள், விளைவுகள், ஆபத்தான நிலைகள், உடனடி சிகிச்சை, தவிர்த்தல் மற்றும் நோய் தவிர்ப்புக்காக மேற்கொள்ளக்கூடிய விசேட நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. சமூக நலன் கருதி இது போன்ற திட்டங்களை மாதமொரு தடவை முன்னெடுக்க வைத்தியசாலை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு செயலமர்விலும் சுமார் 100 – 150 பங்குபற்றுநர்களை உள்வாங்க வைத்தியசாலை திட்டமிட்டுள்ளது.
'இச் செயலமர்வில் இருதய நோய்கள் மற்றும் உடனடி சிகிச்சைகள் குறித்து பல தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. எதிர்காலத்திலும் இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்' என Sri Lanka for American Society for Quality இன் பிரதான பரிசோதகர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
வைத்தியசாலையின் பொது முகாமையாளர் வைத்தியர். சமிலா ஆரியனந்த கருத்து தெரிவிக்கையில், 'ஒவ்வொரு நபருக்கும், சிறந்த வைத்தியசாலை ஒன்று அருகிலிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் சிறந்த வைத்தியசாலையில் ஒன்றாக ஹேமாஸ் திகழ்கின்றமையை தயக்கமின்றி தெரிவிக்கிறோம். இதற்கமைவாக, நாம் மக்கள் மத்தியில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைத்தரத்தை முன்னெடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவச விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பெண்களின் நலன், நீரிழிவு கட்டுப்படுத்தல் மற்றும் முகாமைத்துவம், பொது எலும்பியல் தொடர்பாக சிகிச்சைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் பொது சமூக நல செயலமர்வுகள் மற்றும் வைத்திய நிபுணர்களுடனான நேரடி உரையாடல்களை இலவசமாக முன்னெடுக்க வைத்தியசாலை திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.
சுகாதார கல்வி என்பது சுகாதார பராமரிப்பு துறையில் மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஹேமாஸ் வைத்தியசாலையை சேர்ந்த நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொது நோய்கள் தொடர்பான அவர்களின் அறிவை விருத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம் என டாக்டர். ஆரியனந்த தெரிவித்தார்.
பல கிளைகளை கொண்ட, பல் துறை வசதிகளை கொண்ட ஹேமாஸ் வைத்தியசாலை இலங்கையிலுள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், அனுபவம் வாய்ந்த குழு மற்றும் மருத்துவ ஆலோசகர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றமைக்கான ACHSI (Australian Council of Healthcare Standards Institution) சான்றையும் பெற்றுள்ளது.
பொது மக்களின் நலனுக்காக எதிர்வரும் ஜுன் மாதம் தனது சேவைகளை தொடங்கவுள்ள ஹேமாஸ் தலவத்துகொட வைத்தியசாலை, வருடமொன்றில் 150,000 நோயாளர்களை பராமரிக்கக்கூடிய வசதியை கொண்டுள்ளது. இவ் வைத்தியசாலையின் அருகாமையிலேயே தமது தாதியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கென சொந்தமாக தாதியர் பயிற்சி நிலையத்தை கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன், முற்றிலும் புதிய அனுபவத்துடன் சிறந்த நோயாளர் பராமரிப்பு சேவைகளை வழங்க தன்னை தயார்ப்படுத்தியுள்ளது.
ஹேமாஸ் குழுமமானது நுகர்வுப் பொருட்கள், சுகாதார பராமரிப்பு, போக்குவரத்து, பொழுதுபோக்குகள் மற்றும் மின்சக்தி போன்ற ஐந்து முக்கிய துறைகள் குறித்து கவனம் செலுத்தும்; இலங்கையின் முன்னணி பெருநிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
