
வட்டவலை ப்ளான்டேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவராக 1996ஆம் ஆண்டு முதல் கடமையாற்றிய கோவிந்தசாமி சதாசிவம் தமது பதவியிலிருந்து கடந்த 20 ஆம் திகதி ஓய்வுபெற்றதையடுத்து நிறுவனத்தின் பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிய சுனில் விஜேசிங்க புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுனில் விஜேசிங்க நிறுவனத்தின் ஊதிய ஆணைக்குழுவிலும் நியமிக்கப்பட்டுள்ள அதேநேரம் ஒய்வுபெற்ற கோவிந்தசாமி சதாசிவம் நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றுவார் என நிறுவனம் அறிவித்துள்ளது.
சுனில் விஜேசிங்க இதற்கு முன்னர் தங்கொட்டுவ பீங்கான் நிறுவனத்தின் தலைவராகவும் முகாமைத்துவ பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளதுடன் மேர்சன்ட் வங்கியிலும் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளார்.
அதுதவிர ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை தலைவராகவும் , கொழும்பு டொக்யார்டின் உப தலைவராகவும், சம்பத் வங்கியின் பிரதி தலைவராகவும், மேர்சன்ட் கிரடிட் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் நிர்வாக சபை உறுப்பினராக பணியாற்றிய விஜேசிங்க ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை இத்தாலி வர்த்தக மன்றத்தின் தலைவராகவும், ஸ்ரீலங்கா செரமிக் மன்றத்தின் ஸ்தாபக தலைவராகவும் இருந்துள்ளார். சம்பத் லீசிங் மற்றும் பெக்டரிங் லிமிட்டத்தின் தலைவராகவும், ஆசிரி சேர்ஜிக்கல் வைத்தியசாலை, டிஎப்சிசி வர்தன வங்கி ஆகியவற்றின் தலைவராகவும் இலங்கை ஊழியர் சம்மேளனம் மற்றும் இலங்கை தேசிய வர்த்தக சபையின் தலைவராகவும் உள்ளார்.
சுனில் விஜேசிங்க பொறியலாளர் என்பதுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் எம்பிஏ பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.